இந்தியா குடியரசு பெறக் காரணம்…?
1929-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், “பூரண சுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்” என்ற தீர்மானம் நிறைவேறிற்று. அதனை செயல்படுத்த ‘எங்கு, எப்போது எவ்வாறு அகிம்சாபூர்வமான வரி கொடா இயக்கத்தைத் திரும்பவும் தொடரலாம் என்கிற விவரங்களை காந்திஜி அவர்களே நிர்ணயித்து அறிவிப்பார்’ என்ற ஒருமனதான மற்றொரு தீர்மானத்தின்படி காந்திஜிக்குக் காங்கிரஸ் மகாசபை முழு அதிகாரம் வழங்கியது.
அதே நேரத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார மந்த நிலையும், அதன் விளைவாகப் பெருகிவிட்ட வறுமையும், மக்களிடையே கொந்தளித்த தேசிய ஆர்வமும் ஒருங்கே திரிந்து, நாட்டில் ஆங்காங்கே தீவிரவாதக் குழுவினர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். அச்சூழ்நிலையில் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ் துவக்கி வைத்தால் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடையக் கூடிய அபாயத்தை காந்திஜி உணர்ந்தார். ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப எவ்வகையான இயக்கத்தை மேற்கொள்வது என்பகு குறித்து காந்திஜி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.