இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றி சர்ச்சை கருத்து.? பாபா ராம்தேவை கைது செய்ய ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடை.!
இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றி சர்ச்சை கருத்து பரப்பியதாக பாபா ராம்தேவ் மீது பதியப்பட்ட எப்ஐஆர் அடிப்படையில் அவரை கைது செய்ய ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம், பார்மரில் நடந்த ஒரு மத நிகழ்வில் பேசிய யோகா குரு பாபா ராமதேவ், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக பதாய் கான் என்பவர் பார்மரில் உள்ள சோஹ்தான் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி பாபா ராம்தேவ் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
பாபா மீது புகார் :
அந்த புகாரில் பதாய்கான் குறிப்பிடுகையில், யோகா குரு ராம்தேவ், இந்து மதத்தை இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்துடன் ஒப்பிடும் போது முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும், இந்து பெண்களை கடத்துவதாகவும் குற்றம் சாட்டினார் என்றும், இந்து மதம் தன்னை பின்பற்றுபவர்களுக்கு நல்லது மட்டுமே கற்றுக்கொடுக்கும் அதே வேளையில், இரண்டு மதங்களும் (கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம்) மதமாற்றத்தில் வெறித்தனமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இஸ்லாமியர்கள் – கிறிஸ்தவர்கள் :
மேலும் அந்த புகாரில், முஸ்லீம்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் செய்கிறார்கள், பின்னர் அவர்கள் விரும்பியதை செய்கிறார்கள். அவர்கள் இந்துப் பெண்களைக் கடத்தி எல்லா வகையான பாவங்களையும் செய்கிறார்கள். இஸ்லாமியர்கள் நிறைய பாவங்களை செய்கிறார்கள், சிலர் உலகம் முழுவதையும் இஸ்லாத்திற்கு மாற்றுவது பற்றி பேசுகிறார்கள், மற்றவர்கள் உலகையே கிறிஸ்தவமாக மாற்ற விரும்புகிறார்கள் என கூறி, இந்து மதம் அப்படியல்ல என பாபா ராமதேவ் கூறியதாக புகாரில் பதாய் கான் குறிப்பிட்டுள்ளார்.
கைது ரத்து :
இந்நிலையில், மத உணர்வுகளை புண்படுத்தியதாக ராம்தேவ் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் ரத்து செய்ய கோரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மனோஜ் குமார் கார்க், பாபா ராமதேவை கைது செய்ய தடை விதித்துள்ளார். மேலும், மே 20 ஆம் தேதிக்குள் பாபா ராமதேவ் காவல்த்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.