மக்களே…கொரோனா தடுப்பூசி கட்டாயம்;செலுத்தாமல் பொதுஇடங்களுக்கு வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை – அரசு அதிரடி உத்தரவு!
புதுச்சேரி:கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என்றும்,இதை மீறி பொது இடங்களுக்கு வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவிய நிலையில்,அதனைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.அதன்படி,தளர்வுகளற்ற ஊரடங்கு,தொடர்ந்து தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
மேலும்,குறிப்பாக,நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மத்திய,மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. இதுகுறித்து, மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுள்ளது.எனினும்,மக்கள் சிலர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குகின்றனர்.இதற்கிடையில்,பல பகுதிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ளதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
அதே சமயம்,கொரோனா வைரஸ் தற்போது உருமாறி ஓமைக்ரான் எனும் வைரஸாக ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருகிறது. இந்த ஓமைக்ரேன் வகை வைரஸ் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.அதன்படி, இந்தியாவிலும் இந்த ஓமைக்ரான் பாதிப்பு ஏற்கனவே பெங்களூரில் இரண்டு பேருக்கும,குஜராத்தில் ஒருவருக்கும்,மகாராஷ்டிராவில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என்றும்,இதை மீறி பொது இடங்களுக்கு வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும்,இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:
“புதுச்சேரி பொது சுகாதாரச் சட்டம்,1973 இன் பிரிவு 8 மற்றும் பிரிவு 54(1)ன் படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி,புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் ஆக்கப்படுகிறது. இதனால்,தடுப்பூசி போடாதவர்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்படுகிறது.எனினும், இதை மீறி பொது இடங்களுக்கு வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”, என தெரிவித்துள்ளார்.