போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்.. விவசாயிகள் அறிவிப்பு..!
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 13-ம் தேதி முதல் தங்கள் டிராக்டர் மூலம் கானௌரி மற்றும் ஷம்புவில் முகாமிட்டுள்ளனர். இந்த போராட்டம் குறித்து விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 4 முறை நடைபெற்ற பேச்சு வார்த்தை எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதனால் விவசாயிகள் தொடர்ந்து பஞ்சாப்- ஹரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்கத் தலைவர்கள் சர்வான் சிங் பாந்தர் மற்றும் ஜக்ஜித் சிங் தலேவால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பிப்ரவரி 29-ம் தேதி முடிவு செய்யப்படும், அதுவரை “டெல்லி சலோ” போராட்டம் ஒத்திவைக்கபடுவதாகவும், இருப்பினும், விவசாயிகள் ஷம்பு மற்றும் கானௌரி எல்லையில் தொடர்ந்து தங்கி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தனர்.
READ MORE–விவசாய தலைவர்களுக்கு எதிரான தேசிய பாதுகாப்புச் சட்டம் ரத்து!
போராட்டம் நடத்தும் விவசாய சங்க தலைவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்வதாக தெரிவித்த அம்பாலா போலீசார் சட்ட ஒழுங்கை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் பிப்ரவரி 24 ஆம் தேதி அதாவது இன்று பஞ்சாப்-ஹரியானா எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள் இன்று மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தப் போவதாகவும், பிப்ரவரி 26 ஆம் தேதி உருவ பொம்மைகளை எரிக்கப் போவதாகவும் பாந்தர் அறிவித்தார்.