பிள்ளைகளுடன் சண்டை …சொத்தில் ஒரு பாதியை நாய்க்கு எழுதி வைத்த தந்தை ..!
மத்திய பிரதேசத்தில் ஒருவர் தனது சொத்தில் ஒரு பாதியை தனது நாய் ஜாக்கிக்கு எழுதி வைத்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் ஓம் நாராயண் வர்மா என்ற விவசாயிகு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். தங்கள் குடும்ப சண்டைக்குப் பிறகு ஒரு முடிவை எடுத்துள்ளார். அதில், அவரது மரணத்திற்குப் பிறகு தனது மனைவி சம்பா பாய் மற்றும் நாய் ஜாக்கி ஆகியோருக்கு தனது சொத்தின் சட்டப்பூர்வ வாரிசாக மாற்றியுள்ளார்.
அவர் தனது சொத்தில் எதையும் தனது குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பவில்லை எனவும் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது விருப்பத்தின்படி, அவர் தனது 18 ஏக்கர் நிலத்தில் பாதியை தனது செல்ல நாய்க்கும், மீதி பாதியை தனது மனைவிக்கும் கொடுத்துள்ளார்.
இது குறித்து ஓம் நாராயண் வர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் என் குழந்தைகளை நம்பவில்லை” என்று கூறினார். எனவே எனது மரணத்திற்குப் பிறகு எனது சொத்தின் பாதி எனது செல்ல நாய் ஜாக்கிக்கும், பாதி என் மனைவி சம்பாவுக்கும் சொந்தமாகும். எனது நாயை யார் கவனித்துக்கொள்கிறார்களோ அவர்கள் அந்த நாயின் பங்கில் எழுதப்பட்ட சொத்தின் உரிமையாளராக இருப்பார்கள் என்று அவர் கூறினார்.