பாட்னா எதிர்க்கட்சி கூட்டம்.. ராகுல்.. மம்தா.. நிதிஷ்குமார் பேச்சு… கெஜ்ரிவால், உமர் அப்துல்லா சலசலப்பு.!  

Patna Opposition Parties Meeting

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி கூட்டத்தில் மாநில கட்சிகளுடன் சில முரண்பாடுகள் இருந்தாலும் பாஜவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. 

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அழைப்பின் பெயரில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி , திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் தாக்கரே), சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் என பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்து 2024 நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தினர்.

பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ் குமார் ஆலோசனை கூட்டத்தில் பேசுகையில், பாஜகவை வீழ்த்துவதற்கு பாட்னாவில் திட்டம் வகுக்கப்பட்டது. இந்தியா மீதும் இந்திய குடியரசின் மீதும் ஆளும் அரசு செலுத்தும் வன்முறையை நாங்கள் தனித்தனியாக நின்று எதிர்க்க முடியாது. இதனால் மாநிலங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தேசத்திற்கு விரோதமான காரியங்களை எதிர்க்க ஒரே குரலாக ஒலிக்க வந்துள்ளளோம் என தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறுகையில், பாரதிய ஜனதா கொண்டு வரும் கருப்புச்சட்டங்களை ஒன்றிணைந்து முறியடிப்பது எங்களின் முக்கியமான நோக்கம். நாம் ஒன்றிணைந்தால்தான் இந்திய ஜனநாயகத்தையும் மக்களையும் காப்பாற்ற முடியும். மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் இந்தியாவில் எந்த குரலுக்கும் வாய்ப்பே இருக்காது எனவும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு, காங்கிரஸ் வழிவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், முரண்பாடுகள் இருந்தாலும் அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளோம். ஒன்றிணைந்து இணக்கமாக கூட்டு முயற்சி மேற்கொண்டு செயல்பட தீர்மானித்து உள்ளோம். இந்தியாவின் இறையாண்மை மீது கருத்தியல் மீது பாரதிய ஜனதாவும் ஆர்எஸ்எஸ்-ன் அடக்குமுறையை கையாளுகின்றன என குற்றம் சாட்டினார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறுகையில், இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த கட்சி செல்வாக்கில் உள்ளதோ அந்த கட்சி தலைமையில் பிரதான கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும். பொது வேட்பாளரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் அனைவரும் செயல்பட்டு உள்ளனர் அதன் விளைவாக இந்த கூட்டம் நடைபெற்றது எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்,  டெல்லி அரசு மீது அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததற்கு காங்கிரஸ் இன்னும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கூட்டத்தில் காங்கிரஸ் மீதான தனது அதிருப்தியை பதிவு செய்தார். அப்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் சமாதானம் செய்து வைத்தனர் நமது வேறுபாடுகளை மறந்து தற்போது ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கூறி அரவிந்த் கெஜிரிவாலை சமாதானம் செய்து வைத்தனர்.

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர்  உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு நீக்கிய போது அதற்கு ஆதரவு தெரிவித்ததாக ஆம் ஆத்மி கட்சிமீதான தனது அதிருப்தியை பதிவு செய்தார் என்ற தகவலும் வெளியானது.

அடுத்த கூட்டம், ஜூலை 10 அல்லது 12இல் இமாச்சல பிரதேச மாநிலத்தில் சிம்லாவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்