கிராமவாசிகளின் எதிர்ப்பால் மனைவியின் சடலத்துடன் பலமணிநேரம் சைக்கிளில் அலைந்து திரிந்த முதியவர்!
உத்திரபிரதேசத்தில் எதற்காக உயிரிழந்தார் என தெரியாமலேயே கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மனைவியின் உடலுடன் அலைந்து திரிந்த முதியவருக்கு காவல்துறையினர் உதவி உள்ளனர்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் லட்சக்கணக்கானோர் தினமும் புதிதாக பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். அதேபோல தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில் பிற காரணங்களால் உயிர் இழப்பவர்கள் கூட கொரோனாவால் தான் உயிரிழந்து இருப்பார்களோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் அதிக அளவிலேயே காணப்படுகிறது. தங்கள் உயிரை பாதுகாத்து கொள்வதற்காக மக்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தையே புறக்கணிக்க தான் செய்கின்றனர்.
அதுபோல உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஜான்பூரில் வசித்து வரக்கூடியவர் தான் திலக்கிதாரி சிங். இவரது மனைவி ராஜ்குமாரி, இவருக்கு 50 வயது ஆகிறது. இவருக்கு பல நாட்களாக உடல்நலக்குறைவு இருந்துள்ளது. இதனையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்து காணப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அவரது மனைவி உயிர் இழந்து விடவே, ஆம்புலன்ஸில் மனைவியின் உடலை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.
ஆனால் மனைவியின் உடலை தகனம் செய்வதற்காக திலக்தாரி சென்ற பொழுது கிராமவாசிகள் தங்களுக்கு கொரோனா பரவி விடும் என்ற அச்சத்தில்தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாத சிங் தனது மனைவியின் உடலை சைக்கிள் ஒன்றில் வைத்துக் கொண்டு தகனமேடைக்காக பல இடங்களில் அலைந்து திரிந்து உள்ளார். ஆனால் எங்குமே கிடைக்காத நிலையில் சோர்வடைந்து சாலையிலேயே மனைவியின் உடலை போட்டு விட்டு தளர்வாக அமர்ந்துள்ளார். முதியவர் சிங்கின் நிலை குறித்து அறிந்த ஜான்பூர் நகர போலீசார் முதியவருக்கு உதவியுள்ளனர். இதன் பின் ராம்காட் பகுதியில் உள்ள தகன மேடையில் சிங்கின் மனைவிக்கு இறுதி சடங்குகளை போலீசார் நடத்தி வைத்துள்ளனர்.