இளம் வயது நோயாளிக்காக படுக்கையை விட்டுக்கொடுத்து வீட்டிற்கு சென்ற முதியவர்…! மூன்றே நாளில் நிகழ்ந்த சோக சம்பவம்…!
இளம் வயது நோயாளிக்காக படுக்கையை விட்டுக்கொடுத்து வீட்டிற்கு சென்ற முதியவர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்க உறுப்பினரான நாராயணன் தபல்கர். இவருக்கு வயது 85. இவர் கொரோனா தொற்று காரணமாக நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததால், மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், அந்நேரத்தில் 40 வயது கணவரை கொரோனா தொற்று காரணமாக பெண்ணொருவர் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்களிடம் கெஞ்சியதை அந்த முதியவர் பார்த்துள்ளார்.
இதனை பார்த்த அவர் மருத்துவர்களிடம், ‘எனக்கு வயது 85. நான் என் வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். ஒரு இளைஞனின் உயிரை காப்பாற்றுவது மிகவும் முக்கியமானது. அவர்கள் குழந்தைகள் இளமையாக இருக்கிறார்கள். தயவு செய்து என் படுக்கையை அவர்களுக்கு கொடுங்கள்.’ என மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்
இருப்பினும் மருத்துவர்கள் அவரது நிலை சீராக இல்லை என்பதால், அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த முதியவர் தனது மகளை அழைத்து, நிலைமையை எடுத்துக்கூறி படுக்கையை அந்த இளைஞருக்கு விட்டுக்கொடுத்து வீட்டிற்கு சென்றார்.வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட 3 நாட்களிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் அவரின் மகள் இதுகுறித்து கூறுகையில், ஏப்ரல் 22-ஆம் தேதி ஆக்சிஜன் அளவு குறைந்த காரணத்தால் அவரை நாங்கள் இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பெரும் முயற்சிக்குப் பின் எங்களுக்கு படுக்கை கிடைத்தது. ஆனால் இரண்டு மணி நேரத்தில், அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். கடைசித் தருணங்களை எங்களுடன் செலவிட விரும்புவதாக தந்தை கூறினார். மேலும் இளம் நோயாளியின் நிலை குறித்தும் எங்களிடம் தெரிவித்திருந்தார் என்று அவர் தெரிவித்துள்ளார்.