அடுத்த ‘குறி’ அரவிந்த் கெஜ்ரிவால் தான்.! பரபரப்பை ஏற்படுத்திய சுகேஷ் சந்திர சேகர்.!
சத்யேந்திர ஜெயின், மணீஷ் சிசோடியவை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யபடுவார் என பணமோசடி வழக்கில் சிக்கி டெல்லி சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் டெல்லி நீதிமன்ற வளாகத்தில் தெரிவித்துள்ளார்.
பல்வேறு பணமோசடி வழக்கில் சிக்கி டெல்லி சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் நேற்று டெல்லி பாட்டியலா நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு மார்ச் 18ஆம் தேதி வரையில் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அடுத்த கைது கெஜ்ரிவால் :
அதன் பிறகு நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டபோது, அடுத்து கைது செய்யப்பட போவது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்றும், அவருக்கும் டெல்லி மதுபான கொள்கையில் சம்பந்தம் இருக்கிறது என்றும் கூறிவிட்டு சென்றார்.
சிசோடியா – ஜெய்ன் :
ஏற்கனவே, டெல்லி மதுபான கொள்கை வழக்கில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை என மாறி மாறி கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அதே போல மற்றொரு ஊழல் வழக்கில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுகேஷ் சந்திரசேகர் :
இப்படி இருக்கும் சூழலில் சுகேஷ் சந்திரேசகரின் இந்த பேட்டி, டெல்லி அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இவர் ஏற்கனவே, அரவிந்த் கெஜ்ரிவால், சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியினர் மீது குற்றசாட்டுகளை முன்வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.