கொரோனாவை கட்டுப்படுத்த அடுத்த 3 மாதங்கள் முக்கியமானதாகும் – ஹர்ஷ்வர்தன்
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் அடுத்த 3 மாதங்கள் முக்கியமானதாகும்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக, உத்திரபிரதேச மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், பண்டிகை மற்றும் குளிர்காலத்தை எதிர்கொள்ள உள்ளதால், பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் அடுத்த 3 மாதங்கள் முக்கியமானது என்றும், வடமாநிலங்களில் பரிசோதனை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.