ஹேமா கமிட்டி அறிக்கை: கேரள அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு.!
திருவனந்தபுரம் : ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவத்தையும் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது.
மலையாள திரையுலகில், பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. தற்பொழுது இந்த ஹேமா கமிட்டி அறிக்கையின் முழுமையான வடிவத்தை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்குமாறு கேரள தலைமைச் செயலாளர் (சிஎஸ்) சாரதா முரளீதரனுக்கு தேசிய மகளிர் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கேரள பாஜக தலைவர்கள் பிஆர் சிவசங்கர் மற்றும் சந்தீப் வாச்சஸ்பதி ஆகியோர் டெல்லி NCW அலுவலகத்தில், நேற்று நேரடியாக சென்று புகார் அளித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, முழுமையான அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் சமர்ப்பிக்குமாறு கேரள உயர் நீதிமன்றமும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
290 பக்கங்கள் அடங்கிய ஹேமா குழு அறிக்கையில் 233 பக்கங்கள் கொண்ட தகவல் மட்டுமே மட்டுமே பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது. தனியுரிமை மீறப்படும் என்று சில பகுதிகளை நீக்கிவிட்டு அந்த அறிக்கையை வெளியிட்டது. இதனால், பல முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் வெளியே வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஹேமா கமிட்டி அறிக்கையில் திரைப்பட வாய்ப்புகளுக்காக, பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாகவும், பிரபல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் அதில் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. இதனைத்தொடர்ந்து, பல ஆண்டுகளுக்கு முன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகைகள், தாங்கள் அனுபவித்த கொடுமைகளை பொது வெளியில் வெளிப்படையாக பேச வருகின்றனர்.
ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு பிறகு, நடிகைகள் அளித்த புகாரின்படி, மலையாள நடிகர்கள் மீது எழுந்த பாலியல் புகார்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இந்த புகார்களின் அடிப்படையில இதுவரை இயக்குனர் ரஞ்சித், நடிகர் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 7 பேர் மீது பாலியல் வழக்கு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.