அதிக விலைக்கு விற்ற கொரோனா வைரஸ் மருந்து ‘ரெம்டெசிவர்’.! 7பேர் கைது.!
கொரோனா ஊசி மருந்தான ரெம்டெசிவர் மருந்தை அதிக விலைக்கு விற்ற 7பேர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இதற்கான மருந்துகளை கண்டுபிடிக்க ஆய்வாளர்களும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் பிற நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று நோய்க்கான சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ரெம்டெசிவர் என்ற ஊசி மருந்தை அதிக விலைக்கு 7 பேர் விற்பனை செய்ததை அடுத்து மும்பை போலீசாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
அந்த ஊசி மருந்தின் விலை ரூ. 5,400 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊசி மருந்தை 7 பேர் கொண்ட கும்பல் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கு ரூ, 30,000-க்கு விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து மும்பை நகரில் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் குற்றச்சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து 7 ஊசி மருந்துகளை மீட்டனர்.
கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் மோசடி மற்றும் எஃப்டிஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூலை 24 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்ட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.