குடும்ப அரசியல் செய்யும் அனைத்து கட்சிகளின் பிரதான நோக்கம் ஊழல் மட்டுமே.. பிரதமர் மோடி பேச்சு!
தெலங்கானா மாநிலத்தை ஆட்சி செய்யும் சந்திரசேகர ராவ்-ன் குடும்ப அரசியலும், ஊழலும், உச்சத்தை அடைந்துள்ளது என பிரதமர் பேச்சு.
சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டின் இறுதியில்சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன. ஆனால், அந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார்.
அந்தவகையில், தெலுங்கானா மாநிலம் வாரங்கல் சென்றுள்ள பிரதமர் மோடி, பல கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் நாக்பூர்- விஜயவாடா நெடுஞ்சாலை பணிகளை தொடங்கி வைத்து பின் அந்நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, நாட்டிலுள்ள இளைஞர்களுக்கான மற்றொரு பெரிய வேலை வாய்ப்பு உற்பத்தித் துறையாக மாறி வருகிறது தெலுங்கனா. உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக ஊக்கத் திட்டத்தை (பிஎல்ஐ) தொடங்கி உள்ளோம்.
இதுதொடர்பாக தெலுங்கானாவில் 50க்கும் மேற்பட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 9 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1000 கோடிக்கும் குறைவாக இருந்தது, இன்று ரூ.16,000 கோடியைத் தாண்டியுள்ளது. நாடு முழுவதும், நெடுஞ்சாலைகள், விரைவுச்சாலைகள், பொருளாதார தாழ்வாரங்கள் மற்றும் தொழில்துறை தாழ்வாரம் ஆகியவற்றின் நெட்வொர்க் வளர்ந்து வருகிறது.
தெலுங்கானா அண்டை பொருளாதார மையங்களை இணைக்கிறது மற்றும் மையமாக மாறி வருகிறது என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர், குடும்ப அரசியல் செய்யும் அனைத்து கட்சிகளின் பிரதான நோக்கம் ஊழல் மட்டுமே. குடும்ப அரசியல் செய்யும் காங்கிரஸ் கட்சியின் ஊழல் உலகமறிந்தது. வாரிசு கட்சிகளின் அடித்தளமாக ஊழல் உள்ளது.
தெலங்கானா மாநிலத்தை ஆட்சி செய்யும் சந்திரசேகர ராவ்-ன் குடும்ப அரசியலும், ஊழலும், உச்சத்தை அடைந்துள்ளது. தெலுங்கானாவில் ஆளும் அரசு ஒரு அதிகாரத்தை மையமாக கொண்டு மாநில வளர்ச்சியை கீழே தள்ளுகிறது என்றும் கேசிஆர் அரசு ஊழல் செய்யாத திட்டம் எதுவும் தெலுங்கானாவில் இல்லை எனவும் பிரதமர் மோடி குற்றசாட்டியுள்ளார்.