பிஜேபியின் ABVPயை வீழ்த்தி இடதுசாரி மாணவர் அமைப்பு வெற்றி..!!
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி ஆதரவு மாணவர் அமைப்பு முன்னிலை பெற்றுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. தலைவர், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர் ஆகிய நான்கு பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பலத்த போட்டி காணப்பட்டது.
இந்த தேர்தலில், பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான ஏபிவிபி எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், மற்றும் காங்கிரஸ் ஆதரவு மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ எனப்படும் இந்திய தேசிய மாணவர் சங்கம் இடையே முக்கிய போட்டி நிலவியது.
டெல்லியில் மிக முக்கிய பல்கலைக்கழகமான, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியது. ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான, ஏபிவிபி எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் குற்றம்சாட்டியது.
மேலும் தங்கள் அமைப்பினரை இடதுசாரி மாணவர் அமைப்பினர் தாக்கியதாக புகார் கூறியது. பதிலுக்கு தங்கள் அமைப்பைச் சேர்ந்த மாணவர்களை ஏபிவிபி அமைப்பினர் கடத்திச் சென்றதாக இடதுசாரி மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர். இதனால் வாக்கு எண்ணிக்கை பல மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர் இன்று காலை முதல் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் நிலவரப்படி, தலைவர் பதவிக்கு, ஐக்கிய இடதுசாரி கூட்டணியை சேர்ந்த சாய் பாலாஜி தலைவர் தேர்தலிலும், சரிகா சவுத்ரி துணை தலைவர் தேர்தலிலும், ஐஜாஸ் அஹமத் ராத்தெர் பொதுச் செயலாளர் தேர்தலிலும் , அமுதா ஜெயதீப் துணை பொதுச் செயலாளர் தேர்தலிலும் முன்னிலை பெற்றுள்ளனர்.
இந்திய மாணவர் சங்கம், இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு, அனைத்திந்திய மாணவர்கள் கூட்டமைப்பு, டெல்லி மாணவர்கள் கூட்டமைப்பு ஆகிய சங்கங்கள் இந்த ஐக்கிய இடதுசாரி கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. ஏபிவிபி அமைப்பினர் எந்த இடத்திலும் வெற்றி முன்னணி பெறவில்லை.
DINASUVADU