கேரள எம்.பி.க்கள் லட்சத்தீவு வருவதற்கு அனுமதி தர,அத்தீவு நிர்வாகம் மறுத்துள்ளது.
லட்சத்தீவின் புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்ட பிரபுல் கோடா படேல், அப்பகுதியில் மாட்டிறைச்சி தடை,தீவுகளில் குற்ற விகிதம் மிகக் குறைவாக இருந்தாலும் குண்டர் சட்டம் அறிமுகம் போன்ற அதிரடியாக மாற்றங்களை கொண்டு வந்தார்.இதற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனையடுத்து,தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்,பிரபுல் கோடா படேலை லட்சத்தீவில் இருந்து திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.மேலும்,காங்கிஸ் எம்.பி ராகுல் காந்தி,மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து,லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை நீக்கக் கோரி கேரள சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.மேலும், முதல்வர் பினராயி விஜயன் அவர்கள்,பிரபுல் கோடா படேலை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்நிலையில்,லட்சத்தீவு மக்களின் பிரச்னைகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக,இடதுசாரி ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எஃப்) கேரள எம்.பி.க்கள் இளமாறன் கரீம், வி.சிவதசன், ஏ.எம். ஆரிஃப், பினாய் விஸ்வம், எம்.வி.ஸ்ரேயாம் குமார், கே சோமபிரசாத், தாமஸ் சாஜிகாதன் மற்றும் ஜான் பிரிட்டாஸ் ஆகியோர் அனுப்பிய விண்ணப்பத்தை லட்சத்தீவு நிர்வாகம் நிராகரித்துள்ளது.
மேலும்,இது தொடர்பாக நிர்வாகம் தனது கடிதத்தில்,”கேரள எம்.பி.க்கள் வருகையின் நோக்கம் அரசியல் நடவடிக்கை என்றும், அரசியல் நடவடிக்கைகளுக்காக அவர்கள் தீவுகளுக்கு வருகை தருவதால் அனுமதி நிராகரிக்கப்படுவதாகவும்,தீவுகளின் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்கும் என்றும், மேலும்,பொது மக்களின் நலனுக்கு எதிரானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும்,கேரள எம்.பி.க்கள் வருகை,உள்ளூர் மக்கள், அரசியல் கட்சிகள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களை நிர்வாகத்திற்கு எதிராக தூண்டி போராட்டங்கள் மேற்கொள்ள வழிவகுக்கும்.இந்த போராட்டங்கள் வாயிலாக, கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது “,என்று நிர்வாகம் கூறியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஹிபி ஈடன் மற்றும் டி.என்.பிரதாபன் ஆகியோர் லட்சத்தீவு செல்ல கோரிய அனுமதியை நிர்வாகம் நேற்று மறுத்தது குறிப்பிடத்தக்கது.