குடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்பட்டாலும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு.! கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு.!
குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் அதனால் ஒருவர் பாதிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவருக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டில், கேரளாவில் ஆட்டோரிக்ஷாவில் ஒருவர் பயணித்த போது, எதிரே வந்த கார் ஒன்று ஆட்டோரிக்ஷாவில் மோதியது. அந்த விபத்தில், ஆட்டோ ரிக்ஷவில் பயணித்த நபர் (மனுதாரர்) சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அதனால், மருத்துவமனையில் ஏழு நாட்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகும் ஆறு மாதங்கள் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மாத வருமானம் ரூ.12,000. இவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு 4 லட்சம் இழப்பீடு கோரி மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயத்தை (எம்ஏசி) அணுகினார். ஆனால், தீர்ப்பாயம் ரூ.2.4 லட்சம் மட்டுமே வழங்கியது. ஓட்டுநர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதால் காப்பீடு செய்தவருக்கு இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என்று காப்பீட்டு நிறுவனமும் மறுத்துவிட்டது.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட நபர் கேரள உயர்நீதிமன்றத்தை நாடினார். இதனை விசாரித்த நீதிமன்ற அமர்வு, பாலிசி சான்றிதழில் உள்ளது போல குடிபோதையில் வாகனம் ஓட்டுவது பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறுவதாக இருந்தாலும், அதனால் பாதிக்கப்பட்டது மூன்றாம் தரப்பினர். இதில் 3ஆம் தரபினர் மீது எந்த குற்றமும் இல்லை. ஆதலால், அவருக்கு இழப்பீடு வழங்குவது காப்பீட்டு நிறுவனத்தின் பொறுப்பாகும்.
எனவே, பாதிக்கப்பட்டவரின் இழப்பீடு மற்றும் வருவாய் இழப்பு, உடல்நல பாதிப்பு, பார்வையாளர் செலவுகள் ஆகியவற்றிற்காக கூடுதல் தொகையாக ரூ.39,000 பாதிக்கப்பட்ட ஆண்டு முதல் ஆண்டுக்கு 7% வட்டியுடன் பாதிக்கப்பட்டவருடைய வங்கி கணக்கில் டெபாசிட் செய்யுமாறு நீதிமன்றம் காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. மேலும், டிபாசிட் செய்யப்பட்ட தொகையை குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரிடம் இருந்து வசூலிக்குமாறு காப்பீட்டு நிறுவனத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.