ஆர்எஸ்எஸ்-ன் செயலை கேரள அரசு கை கட்டி வேடிக்கை பார்க்காது …!கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் உறுதி
ஆர்எஸ்எஸ்-ன் செயலை கேரள அரசு கை கட்டி வேடிக்கை பார்க்காது என்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் மீண்டும் போராட்டங்கள் நடைபெறுவதால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுவருகிறது.இந்நிலையில் நேற்று கோயில் நடைதிறந்த நிலையில்,கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர்.அதேபோல் ஏராளமானபெண் போலீஸாரும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.
ஆனால் கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண்களையும் வர விடாமல் போராட்டகாரர்கள் தடுத்தார்கள்.
அது மட்டும் அல்லாமல் சபரிமலையில் அருகே செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரின் காரை மறித்து போராட்டக்காரர்கள் வன்முறை தாக்குதல் நடத்தினார்கள்.
இந்நிலையில் கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.அதேபோல் ஆர்எஸ்எஸ்-ன் செயலை கேரள அரசு கை கட்டி வேடிக்கை பார்க்காது என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.