சூடுபிடிக்கும் கர்நாடக தேர்தல் களம்.. பாஜகவில் இருந்து இளைஞரணி தலைவர் விலகல்!
கர்நாடக பாஜகவின் இளைஞரணி தலைவர், அதிருப்தி காரணமாக கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மே மாதம் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவும், இழந்த ஆட்சியை திரும்ப பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது.
தேர்தல் பிரச்சாரம்:
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பாஜக சார்பில் பிரதமர், உள்துறை அமைச்சர், ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
நிர்வாகிகள் விலகல்:
இந்த சமயத்தில் கர்நாடக தேர்தலுக்கான வேட்பாளர்களை பட்டியலையும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. மறுபக்கம், தேர்தலில் போட்டியிட சீட் வழங்காததால் பாஜகவில் இருந்து பல மூத்த தலைவர்கள் விலகி காங்கிரஸில் இணைந்து வரும் நிலை இருக்கிறது.
மீண்டும் ஒரு நிர்வாகி:
அந்தவகையில், கர்நாடகா மாநில பாஜக இளைஞரணி தலைவர் விலகுவதாக அறிவித்துள்ளார். கர்நாடகாவில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், பாஜகவில் இருந்து முன்னாள் முதலமைச்சர் முதல் அடிமட்ட உறுப்பினர்கள் வரை அடுத்தடுத்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். இது பாஜகவுக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வழங்காததால், கர்நாடகா பாஜக இளைஞரணி தலைவர் அரவிந்த் சவுகான் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவதால் கர்நாடக பாஜகவில் கூடுதல் பரபரப்பு நிலவி வருகிறது.