இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.! எகிறும் எதிர்பார்ப்புகள்…
நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் அடுத்த நிகழ்வாக இன்று பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
மத்திய நிதியமைச்சராக ஆறாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நபராக நிர்மலா சீதாராமன் உள்ளார். தேர்தல் நெருங்கும் வேலை என்பதால் இந்த இடைக்கால பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான பல்வேறு அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் 2024..! வேளாண் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு
குறிப்பாக இந்த பட்ஜெட்டில் விவசாயிகள், வேளாண் துறை சார்பில் பல்வேறு சலுகைகள், கடன் வரம்பு உயர்வு ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விவசாயிகளின் கடன் வரம்பு உயர்த்தப்படும் என்றும், வேளாண் பொருள்களின் உற்பத்தி வரியும் குறைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், வேளாண் பொருட்களை பாதுகாத்து வைத்திருக்கும் குளிர்சாதன அறைகளை ஏற்படுத்துவதற்கு வரி குறைப்பு, கட்டுமான பொருட்களுக்கு வரி குறைப்பு, பேட்டரி வாகனங்களுக்கு வரிச்சலுகைகள், மருத்துவ உபகாரனங்களுக்கான தயாரிப்புக்கு வரிச்சலுகைகள் உள்ளிட்டவை இந்த இடைக்கால பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புகள் ஆகும்.
முன்னதாக, ஜனவரி 30 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து உறுப்பினர்களும் அமைதியான முறையில் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், நேற்று பட்ஜெட் கூட்டம் தொடங்கும் முன்னர் பிரதமர் மோடியும் இதனையே வலியுறுத்தினார். நேற்று நடைபெற்ற குடியரசு தலைவர் உரையுடன் நேற்றைய கூட்டத்தொடர் நிறைவு பெற்றது.