பிபிசி அலுவலகத்தில் 2வது நாளாக தொடர்கிறது வருமான வரித்துறை சோதனை!
பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்கின்றன.
பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை:
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீரென சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை 11.30 மணி முதல் பிபிசி அலுவலகத்தில் வருவாய் தொடர்பான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. பிபிசி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மடிக்கணினிகள் மற்றும் செல்போனைகலை பறிமுதல் செய்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிபிசி ஆவணப்படங்கள்:
2002 குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் 2 ஆவணப்படங்களை சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட நிலையில், சில இடங்களில் தடைகளை மீறி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் தான் டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனைக்கு அரசியல் தலைவர்கள் பலர் மத்திய அரசுக்கு கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
வருமான வரி சோதனையில்லை, வருமானவரி ஆய்வு:
இதனிடையே, டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் நடைபெறுவது வருமான வரி சோதனையில்லை, வருமானவரி ஆய்வு எனவும் கூறப்பட்டது. அதாவது, வருமான வரி சட்டத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதில், பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் வருமான வரி சட்டம் 1961ன் 133 ஏ பிரிவின் கீழ் ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, எந்தவொரு வணிகம், தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சென்று அவர்களின் கணக்கு உள்ளிட்ட பிற ஆவணங்களை சரிபார்க்க முடியும். அந்த வகையில் நேற்று பிபிசி அலுவலகங்களில் வருமான வரி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டாவது நாளாக வருமான வரி ஆய்வு:
இந்த நிலையில், பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் இரண்டாவது நாளாக இன்று வருமான வரி ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. பிபிசியின் மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில் நேற்று தொடங்கிய வருமான வரிக் கணக்கெடுப்பு ஆய்வு இன்று இரண்டாவது நாளாகத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச வரிவிதிப்பு தொடர்பாக கூறப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்காக இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. சர்வதேச வரிஏய்ப்பு மற்றும் பண பரிமாற்ற முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.