புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்பு; முதல்முறையாக பாஜக..!
புதுச்சேரி அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்வானது இன்று நடைபெற்றது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. மொத்தம் 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
இதனையடுத்து,என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அவர்கள் மே 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார்.ஆனால்,என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே சபாநாயகர் பதவி மற்றும் அமைச்சர் பங்கீட்டில் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்து வந்த நிலையில் பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க முதல்வர் ரங்கசாமி ஒப்புக்கொண்டார்.
அதன்பின்னர்,50 நாட்கள் கழித்து புதுச்சேரி அமைச்சரவைக்கான பெயர் பட்டியலை அம்மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள் துணை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களிடம் கடந்த 23 ஆம் தேதி வழங்கினார்.
இதற்கிடையில்,சட்டப்பேரவையின் 21-வது சபாநாயகராக பாஜக செல்வம் அவர்கள் கடந்த ஜூன் 16 ஆம் தேதியன்று பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில்,புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் தலைமையில் அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்வானது இன்று நடைபெற்றது. அந்நிகழ்வில், அமைச்சர்களாக பாஜக சார்பில் நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணன் ஆகியோரும்,என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் லட்சுமி நாராயணன்,தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா உட்பட மொத்தம் 5 பெரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.அவர்களுக்கு அம்மாநில துணை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதுச்சேரி அமைச்சரவையில் முதல் முறையாக பாஜக இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.