கொரோனா பாதித்த மனைவியைக் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட கணவர்!

மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மனைவியை கொன்று விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பாட்னாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளதே தவிர குறைந்தபாடில்லை. தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனாவை ஒழிப்பதற்காக மத்திய அரசாங்கம் எவ்வளவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. மேலும், பலர் கொரோனாவுடன் போராட தைரியமின்றி தாங்களாகவே தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
ஆனால் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் ரயில்வே துறையில் பணி செய்யக்கூடிய அதுல் லால் எனும் நபர் தனது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனது மனைவியை கொலை செய்துள்ளார். அதன்பின் மாடியில் இருந்து கீழே குதித்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.