திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பெரும் ஆபத்து..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பெரும் ஆபத்து..!
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலை, மத்திய அரசு தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான சதி திட்டங்களை செய்து வருவதாக ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அம்மாநிலத்தின் சித்தூர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்தார். அதில், ”மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதாவின் மோடி அரசாங்கம், திருப்பதி ஏழுமலையான் கோவிலின் நிர்வாகத்தை கைப்பற்ற சதி திட்டம் தீட்டியுள்ளது. இந்த சதி திட்டத்தை நாங்கள் உடைத்து கோவிலை மாநில கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்போம்.
மத்திய அரசின் இந்த சதி திட்டம் ஒரு போதும் நிறைவேறாது. திருப்பதி ஏழுமலையான் அருளால், 2003-ம் ஆண்டு என் மீது நடத்தப்பட்ட பயங்கரமான தாக்குதலில் உயிர் தப்பினேன். திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதத்தை யாரும் சிதைக்க அனுமதிக்கமாட்டேன்.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு டெல்லிக்கு சென்று, நம் மாநிலத்தின் வளர்ச்சி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி தருமாறும், மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறும் கேட்டேன். ஆனால் அவர்கள் எதையும் நமக்கு தராமல் துரோகம் செய்துவிட்டனர்”. என பேசினார்.
முன்னதாக, மத்திய அரசு திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஏழுமலையான் கோவில் உட்பட அனைத்து கோவில்களின் சொத்து விவரங்கள், அந்த கோவில்களின் வரலாறுகள் குறித்து தகவல்கள் அனுப்பும்படி, மத்திய தொல்லியல் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி, பின் அந்த நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.