பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்றம்..! வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி..!
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை நிறுவினார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 64,500 சதுர அடியில், ரூபாய் 970 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் மக்களவை சபாநாயகர் மத்திய அமைச்சர்கள் ராஜா சிங் அமித்ஷா ஜெய்சங்கர் பாஜக தலைவர் கலந்து கொண்டனர்.
புதிய கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு, பிரதமர் மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கான பூஜையை பிரதமர் மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து பாரம்பரிய பூஜை (கணபதி ஹோமம்) நடத்தப்பட்டது. இதேபோல, அனைத்து மத குருமார்கள் வழிபாடும் நடைபெற்றது. இதனையடுத்து, ஆதீனங்கள் 21 பேரும் பிரதமர் மோடியிடம் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை வழங்கினர். பிரதமர் மோடி மரியாதை நிமித்தமாக செங்கோல் முன் விழுந்து வணங்கினார்.
இதன்பின், சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து ஆதீனங்கள் அனைவரும் வேத மந்திரங்கள் முழங்க பிரதமர் மோடி செங்கோலை எடுத்து சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் நிறுவினார்.