தொடரும் நிலச்சரிவு விபத்துகள்.., மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த ராகுல் காந்தி.!
டெல்லி : கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் நிலச்சரிவில் சிக்கியுள்ள பலரை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வயநாடு நிலச்சரிவு குறித்து பிரதமர் மோடி தனது வருத்தத்தை தெரிவித்து மத்திய அரசு சார்பில் நிவாரண உதவிகளையும் அறிவித்தார். அதே போல ராகுல் காந்தி , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே என பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.
கேரள வயநாடு நிலச்சரிவு விவகாரம் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது. இன்று மக்களவையில் வயநாடு நிலச்சரிவு குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இன்று அதிகாலை, வயநாடு பல ஆபத்தான நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டது. இதில் சுமார் 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
முண்டக்கை கிராமத்தில் போக்குவரத்து முழுதாக துண்டிக்கப்பட்டுள்ளது. பேரழிவு பாதிப்புகள், உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஆகியவை இன்னும் மதிப்பிடப்படவில்லை. கேரள பாதுகாப்பு அமைச்சர் மற்றும் கேரள முதல்வரிடம் நான் தொடர்பு கொண்டு பேசினேன்.
மீட்பு மற்றும் மருத்துவப் பராமரிப்புக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் கேரளாவுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இறந்தவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். முடிந்தால் அந்த இழப்பீட்டை அதிகரிக்க செய்யுங்கள்.
வயநாடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவு அபாயம் உள்ளது. நமது நாடு கடந்த சில ஆண்டுகளாக நிலச்சரிவு ஆபத்துகளை அதிகமாக எதிர்கொள்கிறது. நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளை அறிய உரிய வரைபடங்களை உருவாக்கி பலவீனமான பிராந்திய பகுதிகளில் அதிகரித்து வரும் இயற்கை பேரழிவுகளை நிவர்த்தி செய்வதற்கு உரிய தணிப்பு நடவடிக்கைகள் மற்றும் செயல்திட்டத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய அவசர தேவையாக உள்ளது என ராகுல் காந்தி மக்களவையில் தெரிவித்துள்ளார்.