மது வாங்க வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம் – அரசு உத்தரவு..!
மது வாங்க வருபவர்கள் ஆர்டிபிசிஆர் கொரோனா நெகடிவ் சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது வரை குறையாமல், நாளொன்றுக்கு சுமார் 20 ஆயிரம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கேரள அரசு பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி,கடைகள், நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்,கேரளாவில் உள்ள மதுக்கடைகளுக்கு செல்வோர் இனிமேல் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரங்களுக்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ்களை மதுக் கடையில் கட்டாயம் காட்ட வேண்டும் என்று கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
வரவிருக்கும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு,மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், இந்த கட்டுப்பாடுகள் தற்காலிகமானவைதான் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.