தீர்ந்தது பெட்ரோல், டீசல்… வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள்.! பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு.!
அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷ்யா, பாரதிய நகரிக் சுரக்ஷா 3 ஆகிய புதிய சட்டங்களை சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது.
குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றதை தொடர்ந்து நாடு முழுவதும், குறிப்பாக வடமாநிலங்களில் உள்ள லாரி, பேருந்து ஓட்டுனர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்னர் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் குற்றத்திற்கான (Hit and Run) அதிகபட்ச சிறை தண்டனை மூன்று ஆண்டுகள் என்றுதான் இருந்திருந்தது. அந்த சட்டம் தான் தற்போது திருத்தம் பெற்றுள்ளது. அதன்படி, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடினால், குற்றத்தின் தன்மை கொண்டு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
10 ஆண்டுகள் சிறை… புதிய வாகன சட்டம் அமல்.! லாரி ஓட்டுனர்கள் போராட்டம்.!
ஹரியானா, மேற்குவங்கம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், டெல்லி என பல்வேறு மாநிலங்களில் வாகன ஓட்டுனர்கள் இந்த சட்டத்திற்கு எதிராக கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எரிபொருள் கொண்டு செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கத்ததால் நகர்ப்புறம் தவிர்த்து கிராமப்புறங்களில் எரிபொருள் தேவைக்கு கடும் தட்டுப்பாடு எழுந்துள்ளது.
குறிப்பாக மும்பை, டெல்லி உள்ளிட்ட பிரதான முக்கிய நகரங்களை தவிர்த்து மற்ற இடங்களில் பெட்ரோல் இல்லை என்கிற நிலைமை பல்வேறு பெட்ரோல் நிலையங்களில் உள்ளன. இதனால், எரிபொருள் குறைவாக இருக்கும் பல்வேறு பம்புகளில் கார் போன்ற இலகு ரக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
இந்த போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து தற்போது அரசு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஓட்டுநர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி அளவில் அகில இந்திய மோட்டார் வாகன கார்ப்பரேஷன் சங்கத்தினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.