“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!
திருப்பதி கோயிலில் பிரசாதம் தயாரிக்க சுத்தமான பசு நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் பிரசாதம் முறைப்படி செய்யப்படவில்லை. - ரமண தீட்சிதலு.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு உள்ளதாக வெளியான செய்தி நாடு முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் இருப்பதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியதை தொடர்ந்து வெளியான ஆய்வக ரிப்போர்ட்டில், திருப்பதி லட்டுவில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றி கொழுப்பு ஆகியவை கலந்து இருந்ததாக குறிப்பிடப்பட்டது. இந்த தகவல்கள் நாடு முழுவதும் கடுமையான எதிர்வினைகளை சந்தித்து வருகிறது.
இந்த லட்டு விவகாரம் குறித்து, திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு செய்தியாளர்களிடம் பேசுகையில், ” திருப்பதி கோவிலில் ஏழுமலையானுக்கு அன்னப்பிரசாதம், பணியாரங்கள் தயாரிப்பதில் அபசாரங்கள் நடந்துள்ளது. அது தற்போது வெளியே தெரிந்துள்ளது. லட்டு பிரசாதம் தயாரிக்க சுத்தமான பசு நெய் மட்டுமே விநியோகிக்கப்பட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக ஏழுமலையான் கோயிலில் தயாரிக்கப்பட்ட லட்டுகளில் ஜந்துக்களின் கொழுப்பு கலந்து மகா பாவம் செய்துவிட்டனர்.
நான் பிரதான அர்ச்சகராக பொறுப்பில் இருக்கும்போது, இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என உயர் அதிகாரிகளிடம் கூறினேன். அவர்கள் பார்வைக்கு இந்த பிரச்னையை கொண்டு சென்றுள்ளேன். மேலும், கடந்த 5 ஆண்டுகளாக கோயில் பிரசாதம் திட்டமிட் எண்ணிக்கையில் இல்லாமல் குறைவாக தயாரிப்பது. செய்யும் நேரத்தில் கால நிலையை முறையாக பின்பற்றாமல் இருப்பது. அர்ச்சகர்களை சீக்கிரமாக சுவாமிக்கு நெய் வைத்தியம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறுவது.
இந்த புகாரை நான் எடுத்துக்கூறும் போது, என் தோழமை அர்ச்சக்கரர்கள் கூட எனக்கு உதவி செய்யவில்லை. அதனால் என்னால் மாறுதல் கொண்டுவர முடியவில்லை. தற்போது பொறுப்பேற்றுள்ள ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்திருப்பது சந்தோஷமான விஷயம்.
இந்த நெய் விஷயத்தில், கர்நாடகாவில் இருந்து பிரசாதம் தயாரிக்க நெய் வாங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறும் என நம்புவோம். ஆகம சாஸ்திரங்களின்படி அப்போதைக்கு அப்போ பிரசாதங்கள் தயாரித்து பூஜை செய்தால், பெருமாள் சந்தோசப்பட்டு நம்மை ஆசிர்வாதிப்பார்.” என்று திருப்பதி லட்டு விவகாரம் குறித்து முன்னாள் தலைமை அர்ச்சகர் செய்தியாளர்களிடம் கூறினார்.