முதல் முறையாக நீரில் மிதக்கும் விமானம்சேவை – அசத்திய ஸ்பைஸ்ஜெட்.!
குஜராத் மாநிலம் அகமதாபாத் சபர்மதி ஆற்றங்கரை மற்றும் கெவடியாவில் உள்ள படேல் சிலை இடையே அக்.,31ந் தேதி முதல் 2 நீர் வழி விமானாங்களை இயக்க உள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்த நாள் வரும் 31-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. படேலின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்தியாவில் கடல் விமான சேவையை தொடங்குவதற்கான பொறுப்பை ஏற்றுள்ளது.
இந்த விமானம் நீரில் இருந்து புறப்பட்டு நீரில் இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் கடல் விமான சேவையை பிரதமர் மோடி வரும் 31ம் தேதி குஜராத்தில் தொடங்கி வைக்கிறார்.
விமான சேவையின் பயண நேரம் சுமார் 30 நிமிடங்கள் என்றும் உதான் திட்டத்தின் கீழ் இதற்கான கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை http://www.spiceshuttle.com என்ற இணையதள முகவரியில் நாளை முதல் பெற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
படேலுக்கு குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர் (597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இது உலகிலேயே உயரமான சிலை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.