முதியவரின் சடலத்தை தோளில் தூக்கி சென்ற பெண் ஆய்வாளர்…! குவியும் பாராட்டுக்கள்…
பெண் ஆய்வாளர் சிரிசா யாரும் வராததால் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவருடன் இணைந்து முதியவரின் சடலத்தை தோளில் சுமந்து சென்றுள்ளார்.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த காசிப்பா நகராட்சியின் விவசாய நிலத்தில் ஒரு முதியவர் இறந்து கிடப்பதாக காசிப்பா காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து பெண் உதவி ஆய்வாளர் சிரிஷா சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் சடலத்தைப் பார்வையிட்டுள்ளார்.
அந்த சடலம் அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கி இருந்த நிலையில், பலரும் அந்த சடலத்துக்கு அருகே செல்வதற்கு அருவருப்புப்பட்டனர். இந்நிலையில் அப்பெண் உதவி ஆய்வாளர் இறந்து கிடந்த முதியவர் குறித்து விசாரித்ததில், அவர் ஒரு யாசகர் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பெண் ஆய்வாளர் லலிதா சாரிட்டபிள் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்திற்கு அழைத்து, அந்த முதியவருக்கு இறுதி மரியாதை செய்ய பேசினார். இதனையடுத்து, முதியவரின் சடலம் இருந்த இடத்திற்கும், காவல்துறை வாகனத்துக்கும் சுமார் ஒரு சில கிலோ மீட்டர் தூரம் இருந்த நிலையில், அவரின் சடலத்தை எடுத்துச் செல்வதற்கு கூட கிராம மக்கள் ஒத்துழைப்பு தரவில்லை.
எனவே பெண் ஆய்வாளர் சிரிசா யாரும் வராததால் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவருடன் இணைந்து முதியவரின் சடலத்தை தோளில் சுமந்து சென்றுள்ளார். மேலும் முதியவரின் இறுதி மரியாதை செய்வதற்காக தனது சொந்தப் பணத்திலிருந்து சிறிய தொகையையும் அளித்துள்ளார். பெண் ஆய்வாளர் சிரிஷாவின் இந்த செயலுக்கு காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.