ரூ.1 கோடி நிவாரணம்.! ராகுலின் விமர்சனமும்.., அக்னி வீரர் குடும்பத்தாரின் தகவலும்..
மகாராஷ்டிரா: பணியின் போது உயிரிழந்த அக்னிவீரரின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் 1.08 கோடி ரூபாய் நிவாரணம் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று நிகழ்ந்த மக்களவை கூட்டத்தொடரில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி, இந்துக்கள், பாஜக என பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டு விமர்சனம் செய்து இருந்தார். மேலும், நீட் தேர்வு முறைகேடு, அக்னிவீரர் திட்டம் பற்றியும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
மத்திய அரசு அக்னிவீரர் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எரிந்து (Use and Throw) விடுகிறது. இதனால், அவர்களுக்கு தியாகி அந்தஸ்து கூட கிடைப்பதில்லை என ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அக்னிவீரர் திட்டத்தின் கீழ் செயலாற்றும் வீரர்கள் பணியின் போது உயிரிழந்தால் 1 கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது என கூறினார்.
இதனை நிரூபிக்கும் வண்ணம் தற்போது ஓர் தகவல் வெளியாகியுள்ளது, கடந்த வருடம் (2023) அக்டோபர் மாதம் 21ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் பிம்பால்கான் சராய் பகுதியை சேர்ந்த அக்ஷய் கவாட் எனும் அக்னிவீரர் பணியின் போது உயிரிழந்தார்.
மேற்கண்ட அக்னிவீரரின் உயிரிழப்புக்கு அரசு அளித்த நிதி விவரங்கள் குறித்து அக்ஷய் கவாட்டின் தந்தை லக்ஷ்மன் கவதே நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், அக்ஷய் கவாட் உயிரிழப்புக்கு பின்னர் காப்பீடு தொகையாக 48 லட்ச ரூபாயும், மத்திய அரசிடம் இருந்து 50 லட்ச ரூபாயும், மாநில அரசிடம் இருந்து 10 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டது என தெரிவித்தார். மேலும், அக்ஷய் கவாட் சகோதரிக்கு அரசு வேலை வாங்கி தர வேண்டும் என்றும் அக்ஷய் கவாட்டின் தந்தை லக்ஷ்மன் கவதே கேட்டுக்கொண்டார்.