டெல்லியில் கொரோனா பணியில் இருந்த மருத்துவர்.! 175 நாட்களுக்கு பிறகு தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.!

Default Image

டெல்லியில் கொரோனா பணியில் இருந்த மருத்துவர் தன்னுடைய வீட்டிற்கு 175 நாட்களுக்கு பிறகு சென்றுள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகிய முன்கள பணியாளர்களாக திகழ்பவர்கள் அனைவரும் தங்கள் உயிரையும் பணயம் வைத்து மக்களின் பாதுகாப்பிற்காக இரவு, பகல் பாராமல் செயல்பட்டு வருகின்றனர். அதிலும் மருத்துவர்களின் பணி என்பது மிகப் பெரும் சவாலாகவே உள்ளது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்காக டெல்லி மருத்துவமனையில் பணியாற்றி வந்த அஜித் ஜெய்ன் என்பவர் 6 மாதங்கள் கழித்து தன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அவர் பணியாற்றும் மருத்துவமனையில் இருந்து 13 கி. மீ தொலைவில் தான் அவரது வீடு உள்ளதாம். மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்ல வெறும் 30 நிமிடங்கள் மட்டும் தான் ஆகுமாம். ஆனால் அஜித் தனது தொடர் வேலை மற்றும் வீட்டில் உள்ளவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் வீட்டிற்கு செல்லவில்லையாம். இந்நிலையில் தற்போது 175 நாட்களுக்கு பின்னர் வீட்டில் சென்ற அஜித் ஜெய்னை அவரது மகள்கள் கட்டி அணைத்ததுடன் அவரது மனைவி அஜித் ஜெய்னை ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார். இதுகுறித்து மருத்துவர் அஜித் ஜெய்ன் கூறிய போது, மருத்துவமனைகளில் அதிக பணிகள் இருந்ததால் வீட்டில் உள்ளவர்களிடம் இரவு 1 மணிக்கு மேல் போனில் பேசுவேன் என்றும், எனது பெற்றோருக்கு 72 வயதுக்கு மேல் என்பதால் அவர்களின் உடல்நிலையையும் கருத்தில் கொண்டு வீட்டிற்கு வரவில்லை என்றும், வீட்டை விட உயிர்களை காப்பாற்றுவது தான் முதல் பணி என்றும், டெல்லி அரசு மருத்துவர்கள் தங்குவதற்கு தனி இடவசதி ஒதுக்கிய போதிலும் பல நாட்கள் தொடர் வேலை காரணமாக மருத்துவமனையில் தங்க வேண்டியதாக இருந்தது என்றும் அஜித் ஜெய்ன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்