மீண்டும் ஒலிக்கும் “ஒரே நாடு ஒரே தேர்தல்” கோரிக்கை.! மத்தியில் நிலவரம் என்ன.?
சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டம் பற்றி கூறியிருந்ததை அடுத்து, தற்போது மீண்டும் "ஒரே நாடு ஒரே தேர்தல் " குரல் மத்தியில் எழுந்துள்ளது.
டெல்லி : மத்தியிலும், மாநில சட்டமன்றத்திலும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் விதமாக, “ஒரே நாடு ஒரே தேர்தல்” எனும் திட்டத்தை நாட்டில் அமல்படுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது. இதே திட்டத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் குறிப்பிட்ட இடைவெளியில் தேர்தலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக கடந்த முறை அதனை முக்கிய வாக்குறுதியாக தேர்தல் அறிக்கையாகயில் குறிப்பிட்டது. தேர்தலுக்கு பின்னர் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவதால் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடைகள் உருவாகின்றன எனவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு குழு அமைத்து இருந்தது. அந்த குழு கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையின் படி, 2029இல் ஒரே நாடு ஒரே திட்டத்தை அமல்படுத்த சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மாநில சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்றும் சில மாதங்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது. இதில், தொங்கு சட்டசபை, நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட சூழல்களை கருத்தில் கொண்டு திட்டத்தை மேம்படுத்தவும் பரிந்துரைகள் அளிக்கப்பட்டன.
பாஜக கடந்த முறை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது போல இந்த முறை ஆட்சியமைத்து இருந்தால் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தினை அமல்படுத்த பாஜக தீவிரமாக களமிறங்கி இருக்கும். ஆனால், தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சி இன்னும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு உடன்படாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படியான சூழலில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்த ஆட்சிக்காலத்தில் நிறைவேற்ற பாஜக முடிவு செய்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்ததாக தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுமுதல், மீண்டும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பற்றிய குரல்கள் இந்திய அரசியல் வட்டாரத்தில் ஒலிக்கப்படுகின்றன.