முதல்வர் இல்லத்தில் ஆம் ஆத்மி பெண் எம்.பி தாக்கப்பட்டாரா.? டெல்லி காவல்துறைக்கு பறந்த உத்தரவு.!
சென்னை : ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து டெல்லி காவல்துறை விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை டெல்லி காவல்துறைக்கு தொலைபேசி அழைப்பு மூலம் ஓர் புகார் வந்துள்ளது. அதாவது, முன்னாள் டெல்லி மகளிர் ஆணைய தலைவியும் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினருமான ஸ்வாதி மலிவால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்ற போது கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமார் என்பவாரல் தாக்கப்பட்டார் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக, டெல்லி காவல்துறை நேரில் சென்று விசாரிக்கையில், ஸ்வாதி மலிவால் அப்போது அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக ஓர் உத்தரவை டெல்லி காவல்துறைக்கு பிறப்பித்துள்ளது.
அதன்படி, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி ஸ்வாதி மாலிவால், டெல்லி முதல்வர் இல்லத்தில் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல்துறை உரிய விசாரணைக் குழுவை அனுப்பி நடவடிக்கை எடுக்க உறுதியளிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையை 3 நாட்களில் அறிக்கையாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் உத்தரவிட்டுள்ளது.