மணிப்பூர் கலவரம் : ஆட்சியை கலைக்க டெல்லி மகளிர் ஆணையம் பரிந்துரை.!
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் துவங்கிய இரு தரப்பினர் இடையிலான கலவரம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் தவித்து வருகின்றனர். அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு பாலியல் கொடுமைகள் நடந்தது வீடியோ , வாக்குமூலம் , செய்திகள் வாயிலாக பலரது நெஞ்சை பதறவைத்தது.
மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக, அங்குள்ள மகளிர் நிலை அறிய டெல்லி தேசிய மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் தலைமையிலான குழு மணிப்பூர் சென்று நேரில் ஆய்வு செய்தது. அதன் பிறகு குடியரசு தலைவருக்கு கடிதம் ஸ்வாதி மாலிவால் எழுதியுள்ளார்.
அதில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் உட்பட கலவரத்தில் இருந்து தப்பி உயிர்பிழைத்தவர்களின் பெரும்பாலானோருக்கு போதிய நிவாரணம் இன்னும் கிடைக்கபெறவில்லை. மணிப்பூர் பாஜக முதலமைச்சர் என்.பைரன் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலத்தில் வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிவிட்டனர் என குற்றம் சாட்டி இருந்தார்.
மணிப்பூரில் பலருக்கு பாலியல் ரீதியிலான மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளது. இந்த தொடர் சம்பவங்கள் மூலம் மாநில அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதால், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 365ஐ பயன்படுத்தி மணிப்பூர் ஆட்சியை கலைத்து குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் டெல்லி தேசிய மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் குறிப்பிட்டுள்ளார்.