உ.பி ஹத்ராஸ் கோர நிகழ்வு.. 121 பேர் உயிரிழப்பு.!
உ.பி: ஹத்ராஸ் ஆன்மீக நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 121ஆக அதிகரித்துள்ள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் புலராய் எனும் கிராமத்தில் நேற்று போலே பாபா எனும் ஆன்மீக சொற்பொழிவாளர் தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வு முடிந்து அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். பலர் மூச்சி திணறி அங்கேயே மயங்கி விழுந்துள்ளனர். இவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஆனால் துரதஷ்டவசமான கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி , காயமடைந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது.
முதற்கட்டமாக நேற்று 27 பேர் உயிரிழந்தனர் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியான தகவலின் படி மொத்தம் 121 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 28 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர நிகழ்வு தொடர்பாக தனியார் விழா ஏற்பாட்டாளர்கள் மீதும், போலே பாபா மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை துவங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு மாநில அமைச்சர்கள் , காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் சென்று மீட்புப்பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவின் பெயரில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு ஹத்ராஸ் , அலிகர் எட்டா பகுதி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.