புதுவையில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!
புதுவையில் ஜூன் 30ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், பல மாநிலங்களில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் புதுச்சேரியிலும் கொரோனா வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஜூன் 14ம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமக்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தற்போது புதுச்சேரி அரசு மேலும் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 30-ஆம் தேதி வரை நீடித்துள்ளது.
இதன்படி திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு 100 பேருடன் நடத்தி கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் உட்பட்ட அனைத்து கடைகளும் காலை 5 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்கா காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும், பொது போக்குவரத்து காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தனியார் அலுவலகங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தியேட்டர்கள் திறக்க அனுமதி கொடுக்கப்படவில்லை.