குற்றவாளி கைது.. ஆதாரத்துடன் தப்பி ஓடிய குரங்கு.. ராஜஸ்தானில் அரங்கேறிய வினோதம்!

Default Image

ராஜஸ்தானில் கொலை வழக்கில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை குரங்கு திருடி சென்ற வினோதம் சம்பவம் அரங்கேறியுள்ளது.

பொதுவாக, ஒரு குற்றத்தைச் செய்து பின்னர் ஆதாரங்களை அழிப்பவர்கள் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக கருதப்படுகிறார்கள். ஆனால் ஒரு மிருகம் மனிதன் செய்த குற்றத்திற்கான ஆதாரத்தை அழித்துவிட்டால் என்ன செய்வது. அப்படியொரு சம்பவம் தான் அரங்கேறியுள்ளது. அதாவது, ராஜஸ்தானில் ஒரு குரங்கு கொலை வழக்கில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களுடன் தப்பி ஓடியுள்ளது. இது காவல்துறைக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. அந்த ஆதாரத்தில் கொலை ஆயுதம் (இரத்தக் கறை படிந்த கத்தி) இருந்ததாக கூறப்படுகிறது. ஜெய்ப்பூரில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் ராஜஸ்தான் போலீசார் இந்த வாக்குமூலத்தை அளித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

கடந்த 2016 செப்டம்பரில், சந்த்வாஜி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், சஷிகாந்த் சர்மா என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். உயிரிழந்ந்தவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்தக் கோரி, இறந்தவரின் உறவினர்கள் ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் இதுதொடர்பாக ஐந்து நாட்களுக்குப் பிறகு, சந்த்வாஜியில் வசிக்கும் ராகுல் கண்டேரா மற்றும் மோகன்லால் கண்டேரா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட 15 வகையான ஆதாரங்களை கைப்பற்றி ஒரு பையில் சேகரித்து வைத்ததாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, கொலைக் குற்றச்சாட்டின் பேரில் இருவரையும் கூடுதல் மாவட்ட நீதிபதி நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், ஆதாரங்களை சமர்பிக்குமாறு கோரியது, அப்போது, ஒரு குரங்கு கொலை தொடர்பான ஆதாரத்தை திருடியதாகவும், கொலைக்கு முதன்மை ஆதாரமாக இருந்த கத்தியையும் குரங்கு எடுத்துச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வினோத சம்பவம் தொடர்பாக இந்த தகவலை போலீசார் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகவும் சமர்ப்பித்துள்ளனர்.

காவல்துறை அளித்த எழுத்துப்பூர்வ தகவலில், நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல கொலை வழக்கு தொடர்பான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு ஒரு பையில் வைக்கப்பட்டது. அதில், 15 முக்கிய ஆதாரங்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆதாரங்களை வைக்கும் அறையில் போதிய இடம் இல்லாததால் அந்த பையை அஜாக்கிரதையாக (மல்கானா) போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள மரத்தடியில் வைக்கப்பட்ட பையை குரங்கு ஒன்று திருடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும், குற்றவாளி கைது செய்யப்பட்டும், ஆதாரங்களை  குரங்கு எடுத்து சென்ற சம்பவம் ஒரு வினோதமாக பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்