இரண்டாவது காலாண்டிலும் நாட்டில் பொருளாதாரம் மேலும் சரியும் – ரிசர்வ் வங்கி
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலும் இந்தியாவில் பொருளாதார நிலை மேலும் சரியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மும்பையில் நேற்று, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், வங்கியின் ஆண்டு அறிக்கையை வெளியிட்டார். அதில், இந்தியாவில் கொரோனா தாக்கம் இன்னும் நீடிக்கிறது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக கூற முடியாது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை கணித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். முதல்கட்ட ஊரடங்கால், மக்கள் வீடுகளில் முடங்கியதால் தொழிலாளர்கள் வேளைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், அத்தியாவசியமற்ற பொருட்களின் தயாரிப்பு, நுகர்வு, வருவாய் ஆகியவை குறைந்தன. இந்த பாதிப்புகளுடன், இரண்டாம் கட்ட ஊரடங்கின் போது, அரசின் செலவினங்கள் அதிகரித்ததை தொடர்ந்து நோய் தொற்றும் அதிகரித்ததால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பின்னடைவைக் கண்டது. நடப்பாண்டில் ஆகஸ்ட் பிற்பாதியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், மொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 12 சதவீதமாக வீழ்ச்சி காணும் என குறிப்பிடப்பட்டுள்ளது .
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க தவறியிருந்தால், பாதிப்பு இன்னும் அதிகரித்து, அடுத்த ஆண்டு, ஜனவரியில் உச்சத்தை எட்டியிருக்கும். ஆனால், தற்போது அந்த சூழல் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 2 ஆம் கட்ட ஊரடங்கில் ஏப்ரல் முதல் ஜூன் வரை பொருளாதார நடவடிக்கைகள் சுணக்கம் கண்டு, பின் சுதாரிக்கத் துவங்கிஉள்ளன. போக்குவரத்து, விருந்தோம்பல், பொழுதுபோக்கு உள்ளிட்ட துறைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்தாண்டு ஜனவரி – மார்ச் காலங்களில் பொருளாதாரம் பின்னடைவில் இருந்து மீண்டு முன்னேற்ற பாதைக்கு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.