“பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன. ஆனால்.?” பிரதமர் மோடி வருத்தம்…
டெல்லி : பெண்களின் பாதுகாப்பிற்கு நாட்டில் கடுமையான சட்டங்கள் உள்ளன. அதனை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து, டெல்லியில் நீதித்துறையின் தேசிய மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்தும், இந்திய சட்டங்கள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டார். அதில், ” தற்போதைய சூழலில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவை சமூகத்தின் பெரும் கவலைகளாக மாறி உள்ளது. ” என தெரிவித்தார்.
மேலும், ” பெண்களின் பாதுகாப்பிற்காக, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் நமது நாட்டில் பல கடுமையான சட்டங்கள் உள்ளன, ஆனால், நாம் (நீதித்துறை) அதை இன்னும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான வழக்குகளில் எவ்வளவு விரைவாக தீர்ப்புகள் வழங்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு மீதி உள்ள மக்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் கிடைக்கும்.
பாலியல் வழக்குகளில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, மாவட்ட நீதிமன்றங்கள் விரைந்து வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும், நீதித்துறையை அரசியலமைப்பின் பாதுகாவலராக செயல்பட்டு, நீதித்துறை அதன் கடமைகளை சிறப்பாக செய்ததாக உச்ச நீதிமன்றத்தை பிரதமர் மோடி பாராட்டினார்.
இந்த விழாவில் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை நினைவு கூறும் வகையில் தபால் தலைகள் மற்றும் நாணயங்களை பிரதமர் மோடி வெளியிட்டார்.