ஆம்புலன்ஸிற்கு காத்திருக்காமல் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஆட்டோவில் எடுத்து சென்ற அவலம்.!

கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை ஆம்புலன்ஸிற்கு காத்திருக்காமல் உறவினர் ஆட்டோவில் ஏற்றி சென்ற அவலம் சம்பவத்தால் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவில் நிஜாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதனையடுத்து அவரது உடலை உறவினர்கள் ஆட்டோவில் கொண்டு சென்றுள்ளனர். இந்த அவல சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையின் டாக்டர் என். ராவ் விளக்கமளித்து பேசியுள்ளார். கொரோனாவால் உயிரிழந்தவரின் உறவினர் மருத்துவ ஊழியர் என்றும், அவரது உடலை தரும்படி உறவினர் கேட்ட போது, ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியதாகவும், ஆனால் அந்த உறவினர் ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் ஆட்டோவில் உயிரிழந்தவரின் உடலை ஏற்றி சென்றதாக தெரிவித்துள்ளார். இது குறித்த விசாரணை அவரிடம் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்