பரபரக்கும் மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்.! 3 எம்எல்ஏக்கள் ‘திடீர்’ ராஜினாமா.!

Maharastra CM Eknath Shinde

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு அம்மாநிலத்தில் மராத்தா மக்கள் நீண்ட வருடமாக போராடி வருகின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் 10 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து 16 சதவீத இடஒதுக்கீடு மராத்தா மக்களுக்கு அளிக்கப்பட்டது.

ஆனாலும், இந்த 16 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதன் பிறகு அந்த இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்து இருந்தது. இது மராத்தா சமூக மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியது. அடுத்ததாக பல்வேறு முறை அரசுக்கு கோரிக்கை வைத்தும், இடஒதுக்கீடு அறிவிக்கப்படாமல் இருந்தது.

ராஜமுந்திரி மத்திய சிறையில் இருந்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விடுதலை.!

இதனை தொடர்ந்து மராத்தா சமூக செயற்பாட்டாளர் மானோஜ் ஜாரங்கே கடந்த ஆகஸ்ட் மாதம் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இது மாநிலத்தின் பல்வேறு பகுதியில் பரபரப்பை உண்டாக்கியது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு பிறகு காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்கும் நிலைக்கு சென்றது. அதன் பின்னர், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே,  மானோஜ் ஜாரங்கேவிடம் பேசி, இடஒதுக்கீடு குறித்த போராட்டத்தை வாபஸ் பெற வைத்தார்.

இருந்தும், மராத்தா சமூகத்திற்க்கு இடஒதுக்கீடு அளிக்க,  மனோஜ் ஜாரங்கே கொடுத்த அக்டோபர் 24 என்ற காலக்கெடு முடிந்த காரணத்தால் , மீண்டும் போராட்டம் துவங்கியது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஏற்கனவே சிவசேனா (ஷிண்டே ஆதரவு) எம்பிக்கள் ஹேமந்த் பாட்டீல், ஹேமந்த் கோட்சே ஆகியோர் ராஜினாமா செய்து இருந்தனர்.

இதனை தொடர்ந்து, நேற்று, 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர் . வைஜாபூர் எம்எல்ஏ ரமேஷ் போர்னாரே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுரேஷ் வார்புட்கர் மற்றும் பாஜக எம்எல்ஏ லக்ஷ்மண் பவார் ஆகியோர் மராத்தா இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் ராஜினாமா செய்துள்ளனர்.

2 எம்.பிக்கள், 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா, போராட்டம் உள்ளிட்ட பரபரப்பான சூழலில், இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே  அழைப்பு விடுத்துள்ளார். இதில் இடஒதுக்கீடு பற்றி முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்