9 ஆண்டுகள்.. 9 கேள்விகள்… பாஜகவுக்கு எதிராக சரமாரியான கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ்.!

பாஜக ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் 9 ஆண்டுகள் 9 கேள்விகள் என ஒரு கையேட்டினை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று முதல் முதலாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். அதற்கு பிறகு மீண்டும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இந்த வருடத்தோடு ஒன்பது வருடங்களாக பாஜக ஆட்சி புரிந்து வருகிறது. இந்த ஆட்சி காலத்தில் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து காங்கிரஸ் கட்சி 9 ஆண்டுகள் 9 கேள்விகள் என ஒரு கையேடு ஒன்றை தயாரித்து வெளியிட்டு உள்ளது.
- இதனை நேற்று டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டார். அப்போது பொருளாதாரம் , சீன எல்லை விவகாரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சமூக நீதி, விவசாயிகள் போராட்டம் என ஒன்பது வகையான விவகாரங்களை பட்டியலிட்டு ‘9 ஆண்டுகள் 9 கேள்விகள்’ என்ற தலைப்பில் அந்த கையேடு தயாராகி உள்ளது.
- பண மதிப்பு இழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம் காரணமாக நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை பணவீக்கமும், வேலையின்மையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருப்பது ஏன்.?
- விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தற்போது வரை நிறைவேற்றாமல் இருப்பது ஏன்.?
- எல்.ஐ.சி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவைகளில் இருந்த மக்கள் பணத்தை தனியார் நிறுவனங்களுக்கு லாபம் அளிக்கும் வகையில் கொடுத்தது எதற்காக.?
- பாஜக ஆளும் மாநிலங்களின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்.?
- இந்திய பகுதிகளை சீனா தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது. தேர்தல் சமயத்தின் போது மட்டும் வெறுப்பு அரசுகளை கையில் எடுப்பது எதற்காக.?
- தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட மக்களின் மீதான தொடர் தாக்குதல்களை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்.?
- பணபலத்தை வைத்துக் கொண்டு பல்வேறு மாநிலங்களில் ஆளும்கட்சி அரசுகளை கவிழ்ப்பது ஏன்.?
- அரசியல் சட்ட அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது எதற்காக.?
- கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணம் ஏன் வழங்கவில்லை.?
இவ்வாறு ஒன்பது கேள்விகளை எழுப்பி இதற்கு பிரதமர் மோடி கட்டாயம் பதில் அளிக்க வேண்டும் எனவும் இந்த கேள்விகளை மக்களிடம் எடுத்துச் செல்லுவோம் என்றும் காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் குறிப்பிட்டு கூறினார்.