பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி ஆசைப்படவில்லை.. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கார்கே பேச்சு!
பிரதமர் பதவியோ, அதிகாரத்தையே காங்கிரஸ் விரும்பவில்லை என எதிர்க்கட்சி கூட்டத்தில் கார்கே பேச்சு.
கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாம் நாள் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், திமுக, ஆர்.ஜே.டி, ஜே.டி.எஸ், இடது சாரிகள், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளனர். சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே, நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலின், திருமாவளவன், வைகோ உள்ளிட்ட தலைவர்களும் எதிர்க்கட்சிகள் பங்கேற்றுள்ளனர். எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், கூட்டணி பெயர் மற்றும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஒன்றாக இணைந்து பாஜகவை வீழ்த்துவது குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி ஆசைப்படவில்லை. காங்கிரஸ் அதிகாரத்திற்கு வருவதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தை விட மக்கள் நலனும், மதச்சார்பின்மையுமே காங்கிரஸுக்கு முக்கியம்.
அரசியல் அமைப்பு, ஜனநாயகம் மதசார்பின்மை, சமூக நீதியை காப்பதே எண்களின் நோக்கம். மக்கள் நலனே காங்கிரஸுக்கு முக்கியம் என்றார், மேலும்,பழைய கூட்டணியை தொடர பாஜக தலைவர்கள் மாநிலம், மாநிலமாக ஓடுகின்றனர். ED, வருமான வரித்துறை, சிபிஐ ஆகிய விசாரணை அமைப்புகளை எதிர்கட்சிகளை தாக்கும் ஆயுதமாக பாஜக பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பொய் குற்ற வழக்குகள் போடப்பட்டுள்ளன. எம்எல்ஏக்களை மிரட்டியும் விலைக்கு வாங்கியும் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சிகளை பாஜக செய்கிறது என கூறியுள்ளார்.