மாநில பட்ஜெட் எதிரொலி.! கேரள முதல்வருக்கு எதிராக கருப்பு கொடி.! காங்கிரஸ் கட்சியினர் கைது.!
பெட்ரோல், டீசல் வரி உயர்வுக்கு எதிராக கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் வருகையில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு கேரள சட்டமன்றத்தில் நேற்று (பிப்ரவரி 3) 2023-2024க்கான மாநில பட்ஜெட் தாக்கல் செய்தது . நிதி நெருக்கடியில் தவித்து வரும் கேரள அரசுக்கு இந்த பட்ஜெட் கொஞ்சம் சவாலானதாக அமைந்தது. நிதி நெருக்கடியையும் சமாளிக்க வேண்டிய சூழல் அதே போல, மக்கள் பாதிக்கப்படாமலும் பட்ஜெட் இருக்க வேண்டும் என்ற நோக்கம் என பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
மேக் இன் கேரளா திட்டத்திற்கு 200 கோடியும் , விலைவாசி உயர்வில் இருந்து மக்களை காக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களுக்கு 2000 கோடி ரூபாய் நிதியும் என பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டன. அதே போல, பெட்ரோல், டீசல், மதுபானங்களுக்கு செஸ் வரியை அதிகரித்துள்ளது . இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த பெட்ரோல், டீசல் மதுவுக்கு செஸ் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் கொச்சிக்கு வந்த முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு எதிராக கருப்பு கொடி எந்தி முழக்கங்களை எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது . இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட காங்கிரஸ் கட்சி இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர்.