“இந்திய அரசியல் சாசனத்தை அதிகமாக காயப்படுத்தியது காங்கிரஸ் குடும்பம்”- பிரதமர் மோடி கடும் விமர்சனம்!
காங்கிரஸ் குடும்பம்தான் அரசியல் சாசனத்தை வெகுவாக காயப்படுத்தியது என மக்களவையில் பிரதமர் மோடி விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
டெல்லி : மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி காங்கிரஸை விமர்சித்து சில விஷயங்களை பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” அரசமைப்பின் 75 ஆண்டை கொண்டாடும் வேளையில், எமர்ஜென்சி காலத்தைப் பற்றி பேச வேண்டியது அவசியம். அரசமைப்பின் 25-வது ஆண்டை கொண்டாடும்போது எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டது. ஜனநாயகத்தை நெறித்த கறைகளை காங்கிரஸ் கட்சியால் சுத்தம் செய்ய முடியாது.
எமர்ஜென்சி காலத்தில் மக்களின் அதிகாரம் பறிக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். தன்னுடைய பதவியை காப்பாற்றவே இந்திரா காந்தி எமர்ஜென்சியை கொண்டு வந்தார். இந்திய அரசியல் சாசனத்தை அதிகமாக காயப்படுத்தியது காங்கிரஸ் குடும்பம் தான். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மட்டுமே 50 ஆண்டுகளாக ஆட்சி செய்தனர்.
அரசியல் சாசனத்தை காங்கிரஸ் கட்சியை போல அழித்தது வேறு யாரும் இல்லை. அரசியல் சட்டம் மட்டும் வரவில்லை என்றால் என்னைப் போன்றவர்கள் இந்த அவைக்கு வந்திருக்க முடியாது. 2015ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் அம்பேத்கர் சர்வதேச மையம் கொண்டு வரப்பட்டது. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது கூட காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத போதுதான் வழங்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் பாவங்களுக்கு இனி விமோசனமே இல்லை. வாக்கு வங்கி அரசியலுக்காக பட்டியலின, பழங்குடியின மக்களை வஞ்சித்தது காங்கிரஸ். நாடாளுமன்றத்திலும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பேசியவர்கள் காங்கிரஸ் கட்சியினர் தான்” எனவும் கடுமையாக பிரதமர் மோடி விமர்சித்து பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் ” அரசமைப்பு தொடர்பான அவையில் சுமுகமாக விவாதம் நடைபெற்றிருக்க வேண்டும். அவையில் சுமுக விவாதம் நடந்திருந்தால் இளைய தலைமுறையினர் பயனடைந்திருப்பார்கள்” எனவும் தெரிவித்தார்.