உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள்.. 5 பேரை பரிந்துரைத்த கொலீஜியம்..!
அலகாபாத், ராஜஸ்தான், கவுகாத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலிஜியம் இது தொடர்பான பரிந்துரைகளை நேற்று மாலை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
அதன்படி, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி அருண் பன்சாலியை நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா பரிந்துரைக்கப்பட்டார்.
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி விஜய் பிஷ்னோய் கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி ஷீல் நாகு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர் சாரங்கி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பரிந்துரைக்கப்பட்டனர்.
1200க்கும் மேற்பட்ட தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி அருண் பன்சாலி:
உச்சநீதிமன்ற கொலீஜியம், நீதிபதி அருண் பன்சாலி மீதான பரிந்துரையில், “வழக்குகளை தீர்ப்பதன் மூலம் நீதித்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பொருத்தவரையில், ஏறக்குறைய பதினொரு ஆண்டுகள் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்துள்ளார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நீதி வழங்குவதில் பரந்த அனுபவம் பெற்றவர். அவர் திடமான சட்டத் திறன்களைக் கொண்ட ஒரு திறமையான நீதிபதியாகக் கருதப்படுகிறார். எனவே அவர் நாட்டின் மிக உயர்ந்த உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்படுவதற்கு சரியாக இருப்பார்.
நீதிபதி விஜய் பிஷ்னோய், ஏறக்குறைய பதினொரு ஆண்டுகள் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்தில் 652 தீர்ப்புகளை வழங்கியுள்ளார். நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா தனது 14 ஆண்டுகளுக்கும் மேலான பதவிக் காலத்தில் 505க்கும் மேற்பட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
நீதிபதி பி.ஆர்.சாரங்கி 10 ஆண்டுகளுக்கும் மேலாக உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்தில் 1056க்கும் மேற்பட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அதே நேரத்தில், நீதிபதி ஷீல் நாகு, மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய காலத்தில் 499 தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.