நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது.! உச்சநீதிமன்றம் திட்டவட்டம்.!
டெல்லி: இந்தாண்டு மருத்துவ படிப்பிற்காக நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வில் முறைகேடுகள் நேர்ந்ததாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பட்டுள்ளன. இதில் மாணவர்கள் சார்பில் பதியப்பட்டுள்ள வழக்கில் நீட் மறுதேர்வு பற்றிய கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
நீட் தேர்வுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் ஒரே வழக்காக தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகிள்ளப்பட்டுள்ளது. முன்னதாக நடைபெற்று முடிந்த விசாரணையில், மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை , சிபிஐ ஆகியவற்றிடம் விளக்கம் கேட்டு உத்தரவிட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து இன்று நடைபெற்று வரும் விசாரணையில் , மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் நீட் தேர்வு நடத்த வேண்டாம். இதில் நீட் தேர்வுக்கு வராதோர் மற்றும் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் தவிர்த்து தேர்வில் வெற்றியடைந்த 1 லட்சத்து 8 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டும் நீட் மறுதேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.
ஆனால்,இந்த கோரிக்கையை தலைமை நீதிபதி சந்திரசூட் ஏற்க மறுத்துவிட்டார். நீட் தேர்வில் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டால் மட்டுமே நீட் மறுதேர்வு நடத்துவது பற்றி உத்தரவிட முடியும் என நீதிபதி குறிப்பிட்டார்.
மேலும், நீட் வழக்கு விசாரணை என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது சமூக சீர்கேடுகள் தொடர்பான விவகாரம். லட்சக்கணக்கான மாணவர்கள் இன்றைய வழக்கு விசாரணைக்காக காத்திருக்கின்றனர். நீட் தேர்வு முறைகேடுகள் ஒட்டுமொத்த மாணவர்களையும் எந்த வகையில் பாதித்துள்ளது என்பதற்கான காரணங்களை ஆராய வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு வழக்கு விசாரணையில் கூறியுள்ளனர். வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.