அட்சய பாத்திரத்திற்கு பதில், பிச்சை பத்திரமா.? கனிமொழி எம்.பி ஆவேசம்.!
டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த வார செவ்வாய் அன்று மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் தாக்கல் செய்தார் . அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
திமுக எம்பி கனிமொழி இன்று மக்களவையில் மத்திய பட்ஜெட் பற்றி தனது கருத்தை எடுத்துரைத்தார். அதில், மத்திய அரசு கல்விக்கு போதிய நிதியை ஒதுக்கவில்லை என முந்தைய காங்கிரஸ் அரசு, தமிழக அரசு , அண்டை நாட்டுடனும் கல்வி நிதி ஒதுக்கீடு பற்றி கூறினார்.
அவர் பேசுகையில், முந்தைய காங்கிரஸ் அரசில் 4.77 சதவீதம் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழக பட்ஜெட்டில் 12 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்பட்டது. அண்டை நாடான பூடானில் கூட 8 சதவீதம் கல்விக்கு என நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய பாஜக பட்ஜெட்டில் கல்விக்கு 2.5 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை கல்விக்கு 6 சதவீத அளவுக்கு கூட கல்விக்கு நிதி ஒதுக்கவில்லை என குறிப்பிட்டார்
கல்வியில் உங்களுக்கு (மத்திய அரசு) மட்டுமே உரிமை இல்லை. கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. கல்விக்கு மத்திய அரசு 60 சதவீதம் ஒதுக்க வேண்டும். மாநில அரசு 40 சதவீதம் ஒதுக்க வேண்டும். ஆனால், தற்போது மற்ற வரிகளை கணக்கிட்டால் மாநில அரசு கல்விக்கு பாதிக்கு மேல் ஒதுக்கி நிதி தந்து கொண்டு இருக்கிறோம். இதனை பார்கையில், மணிமேகலை கையில் இருக்கும் அட்சய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பிச்சை பாத்திரம் கொடுப்பது போல உள்ளது என திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்தார்.
மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் 45 கேந்திர வித்தியாலயா பள்ளி உள்ளது. அங்கு தமிழை கற்றுக்கொடுக்க கூறி நாங்கள் பலமுறை கேட்டுவிட்டோம். 45 பள்ளிகளில் 15 பள்ளியில் தான் தமிழ் கற்றுக்கொடுக்கப்படுகிறது. எப்படி நீங்கள் எங்கள் தாய்மொழியை வளர்ப்பீர்கள் என்று நம்புவது.? ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கூட தற்போது வாங்க முடியவில்லை. ஹிந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்க முயற்சி செய்கிறீர்கள்.
குழந்தைகளுக்கான சத்துணவு திட்டத்திற்கு கூட மத்திய அரசு போதிய நிதியை வழங்குவதில்லை. விஸ்வகர்மா திட்டம் மூலம் குலக்கல்வியை திணிக்க முயற்சி செய்கிறீர்கள். இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்க கொண்டு வந்துள்ள திட்டம் அது.
உயர்கல்விக்கான நிதி ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. பள்ளி மாணவர்கள் குறைந்தால் பள்ளிகளை மூட முயற்சி செய்கிறார்கள். உயர்கல்வியில் 50 சதவீதம் எட்டிப்பிடிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. அதனை தமிழ்நாடு எப்போதோ தாண்டிவிட்டது. நீட் தேர்வு மூலம் வளர்ந்த ஒரே துறை கோச்சிங் துறை தான். இதுவரை 5,000 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி வளர்ந்து கொண்டு இருக்கிறது என்று பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து திமுக எம்பி கனிமொழி மக்களவையில் இன்று உரையாற்றினார்.