பேச்சுவார்த்தை தோல்வி.. இணைய சேவை துண்டிப்பு.! தொடரும் விவசாயிகள் போராட்டம்…

Delhi Farmers Protest 2024

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், உலக வர்த்தக அமைப்பில் இருந்து இந்தியா விலக வேண்டும். விவசாய கடன் தள்ளுபடி, மின்சார திருத்த சட்டம் 2020-ஐ ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“டெல்லி சலோ” போராட்டம்… இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை..!

சுமார் 200 விவசாய அமைப்பினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டெல்லி எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படுகின்றன. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுடன் ஏற்கனவே மத்திய அமைச்சர்கள் இரண்டும் முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை மீண்டும் மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, பியூஸ் கோயல், நித்தியானந்த் ராய் ஆகிய அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டுப்படாத நிலையில் இன்றும் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் குறித்து அமைச்சர் அர்ஜுன் முண்டா கூறுகையில், விவசாயிகளுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது.  விரைவில் நல்ல தீர்வு காணப்படும். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என தெரிவித்தார்.

விவசாய பிரதிநிதிகள் சார்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது அமைதியான முறையில் எங்கள் போராட்டம் தொடரும். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தை எங்களுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி மற்றும் 12ஆம் தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அந்த பேச்சுவார்த்தையிடம் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் போராட்டம் காரணமாக ஏற்கனவே ஹரியானா மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டு இருந்த இணைய சேவை துண்டிப்பு என்பது வரும் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்